Tuesday, August 19, 2014

பேய் இருக்கா?... இல்லையா?... – டாப் வரிசை புகைப்படங்கள்! - அமானுஷ்யம் - ஓர் அலசல்!

பேய் இருக்கா?... இல்லையா?... – டாப் வரிசை புகைப்படங்கள்! - அமானுஷ்யம் - ஓர் அலசல்!




ஆங்கிலத்திலும் சரி… தமிழிலும் சரி… நாமும் இதுவரை எத்தனையோ பேய் சினிமாக்களையும், சீரியல்களையும் நாவல்களையும் பார்த்தாகிவிட்டது… படித்தாகிவிட்டது… சரி… பேய் இருக்கா?... இல்லையா?... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு… உலகம் முழுக்க பல நூறு ஆண்டா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிற விஷயமிது… திடீருனு இதுக்கு நான் மட்டும் பதில் சொல்லி பல்பு வாங்கிரமுடியுமா என்ன?... 


ஆனா ஒன்னுங்க… பேய் இருக்குதோ இல்லையோ…  சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் பேய்க்கதைகள்னாலே ஒருமாதிரி உடம்பு சிலிர்த்துக்கிட்டு பயந்துகிட்டே கேட்டுட்டு… நைட்டு ஆனதும் அதே மனசுக்குள்ள ஓடி நமக்கு கிளம்புற பீதி இருக்கே… நிஜமாவே அதுவொரு சூப்பர் அனுபவம்தாங்க! (பேயைப்பத்தி பயமேயில்லை… நான் பேயிருக்குன்னு நம்பவே மாட்டேன்னு அடம் பண்ற தைரியசாலிக்குகூட பகல்ல பேய்ப்படம் பார்த்தாங்கன்னா இருட்டுனதும் அதோட தாக்கம் கொஞ்சமாவது அவங்க மனசுக்குல இருக்கும்ன்றது அவங்க மனசாட்சிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம்… எத்தனை நாளைக்குத்தான் பயப்படாதமாதிரியே நடிக்கிறது…அவ்வ்வ்வ்வ்…!)

பழிவாங்குற பேய், இரத்தம் குடிக்கிற பேய், சாராயம் குடிச்சி கோழிக்கறி தின்னுற பேய், வெள்ளையா புகை மாதிரி உருவம், தலமுடிய நீளமா விரிச்சிப்போட்டுட்டு திரியற பேய், கால் இல்லாத பேய்… தலையில்லா முண்டம்… இப்படி மனுசனோட கற்பனைல பேயப்பத்திய விஷயங்கள் விதவிதமா உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டிருந்தாலும் இன்னக்கி வரைக்கும் பேய் இல்லைன்னு சொல்றுதுக்கும், இருக்குன்னு சொல்றதுக்கும் போதுமான சாட்சிகளும் ஆராய்ச்சி முடிவுகளும் இல்லன்றதுதான் நெசம்!



எந்தவொரு சக்திக்கும் ஒரு எதிர்சக்தி இருந்தாதான் அந்த சக்தியோட வேல்யூ அதிகமாகும். அதனால மனுசன் கடவுள்னு ஒரு சக்திய உருவாக்கி வழிபடத்தொடங்கும் போதே அதுக்கான எதிர்சக்தியா உருவாக்கப்பட்ட விஷயமாத்தான் பேய் விஷயமும் இருக்கும்னு சில மெத்தப்படிச்ச மேதாவிங்க சொல்றாங்க. என்னதான் விவாதங்களும் எதிர்விவாதங்களும் நடந்தாலும் இறப்புக்கு பின்னாலானா வாழ்க்கை இன்னமும் ஆராய முடியாத புதிராவே இருக்குறதுதான் பேய் இருக்குன்னு சொல்றதுக்கும், இல்லைன்னு சொல்றதுக்குமான ஒரே விஷயமாப்போச்சு!


கிராமப்புறங்கள்ள இன்னமும் யாராவது அகால மரணமடைஞ்சிட்டாங்கன்னா அவங்க சாவுக்கு அப்புறமா கெளம்புற பேய்ச்செய்திகள் இருக்கே… அப்பப்பா… அதுவும் யாராவது தூக்கு போட்டு செத்துட்டாங்கன்னு அது இன்னும் ஹைலைட்டுதான் போங்க! அந்த கிராமங்கள்ள இருந்தீங்கன்னா ஒரு கட்டத்துல உண்மைலேயே பேய் இருக்குதுப்பான்னு நீங்களே நம்பிருவீங்கன்றதுதான் நெசம்!


நாம பலபேரு பலவிதமான பேய்ப்புகைப்படங்களப் பாத்திருப்போம். உலகம் முழுக்க பலவித பேய்ப்புகைப்படங்கள் பரவினாலும் அதுல முக்காவாசிக்குமேல ஏமாத்துவேலைன்னு நிருபிச்சிட்டாங்க. ஆனா இன்னமும் எந்தவித ஏமாத்துவேலையும் இல்லாத, எந்தவித கேமரா பிரச்சினையும், லைட்டிங் பிரச்சினையும் இல்லாத இன்னமும் இது டூப்புன்னு நிரூபிக்கப்படாத சில ஒரிஜினல் பேய்ப்புகைப்படங்கள் இருக்கு…


அந்த மாதிரி புகைப்படங்களும் அதுக்கான பின்னுரையும் டாப் 10 வரிசையில் இதோ உங்கள் பார்வைக்கு…


ஆஸ்திரேலியா - குயின்ஸ்லேண்டு புகைப்படம்-1946


இந்தப்படம் 1946ல் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டு நகரத்தின் ஒரு கல்லறைத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது. தனது டீன் ஏஜ் மகளின் கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு தாயால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. புகைப்படம் எடுக்கும்போது அங்கே அந்த த்தாயை தவிர வேறு யாருமேயில்லை. ஆனால் அதைப்பிரிண்ட்டு போட்டதும் அதில் தெரிந்த ஒரு குழந்தையின் உருவம் இன்னமும் புரியாத புதிராகவே நீடிக்கிறது. (இந்த ஃபோட்டாவில் டபுள் எக்ஸ்ஃபோசர் பிரச்சினைகள் எதுவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டாகிவிட்டது !)


S.S வாட்டர் டவுண் முகங்கள் – 1924




இந்த புகைப்படம் 1924ம் ஆண்டு SS வாட்டர் டவுன் என்ற வணிகக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட கடல் அலைகள். புகைப்படத்தை டெவலப் செய்தபோது அலைகளில் தெரிந்த இரண்டு முகங்களைக்கண்டு அனைவருமே அதிர்ந்து போயினர். அது வெகுசில நாட்களுக்கு முன்னர் அந்தக்கப்பலிலேயே ஒரு விபத்தில் ஒரே நேரத்தில் செத்துப்போன இரண்டு பணியாட்களின் முகங்கள். இந்தப்புகைப்படமும் பல்வேறு ஆராய்ச்சிக்களுக்குப்பிறகும் எவ்வித முடிவும் கிட்டாத ஒரு படமாகிப்போனது.
வெம் டவுண் ஹால் தீவிபத்து – 1995


இங்கிலாந்தின் வெம் டவுண் ஹால் 1995ல் தீவிபத்தில் சிக்கி கொளுந்துவிட்டு எரிந்தபோது ஒரு பத்திரிக்கை நிருபரால் தெருவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது. கொளுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கு நடுவில் வாசலருகில் ஒரு பெண் அமைதியாய் நிற்பதுபோல் தெரிந்த புகைப்படம் அமானுஷ்யத்தின் அடையாளமாகவே ஆகிப்போனது. இதைக்கண்ட தீயணைப்பு வீரர்கள் தாங்கள் யாரையாவது காப்பாற்றாமல் விட்டு தீக்கிரையாகிப்போனார்களோ என்ற சந்தேகத்தில் எரிந்த கட்டிடத்தின் சாம்பல்களில் மனித எலும்புகளின் மீதம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியும் எந்தவொரு தடயமும் கிட்டவில்லை. புகைப்படமும் போலி என்றோ, டபுள் எக்ஸ்போசர் என்றோ இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை. கூடுதல் சுவாரஸ்யத்தகவல் என்னவென்றால் அதே வெம் டவுண் ஹாலில் 1677ம் ஆண்டில் மெழுகுவர்த்தியாய் தவறவிட்டு தீக்கிரையாகி செத்திருக்கிறாள் ஜேனி என்ற இளம் பெண்ணொருத்தி…!!!


பேச்சிலர்ஸ் கல்லறைத்தோட்டம் – 1991

இதுவரையிலான புகைப்படங்களில் இந்த புகைப்படமும் ஒரு முக்கிய உண்மைப்படமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த புகைப்படம் ஹை-ஸ்பீடு ஷட்டர் கேமரா மூலம் சுடுகாட்டில் அதுவும் பட்டப்பகலில் எடுக்கப்பட்டது. (பேய் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது). அதுவுமில்லாமல் இந்தப்படம் அமானுஷ்யம் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களாலேயே எடுக்கப்பட்டது. மேலும் இந்தப்படத்தை கிளிக்கும் முன் அவர்களின் ஆராய்ச்சிக்கருவிகளில் எலெக்ட்ரோ மேக்னட் அலைவரிசை அதிகமாகவே அலைபாய்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 11, 1991ம் ஆண்டு பேய் ஆராய்ச்சி சொஸைட்டியைச் சேர்ந்த மரி ஹஃப் என்ற புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்ட இந்தப்படம் இதுவரையிலும் டபுள் எக்ஸ்போசர் என்றோ, போலி என்றோ நிரூபிக்கப்படாதது கூடுதல் சிறப்பு!
கொராபோரீ ராக் ஆவி – 1959


இந்தப்படம் ஆஸ்திரேலியாவின் கொராபோரீ என்ற இடத்தில் 1959ம் ஆண்டு ஆர்.எஸ்.ப்ளேன்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டு இன்றளவும் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.


HMS டேடலஸ் ஃபோட்டோ – 1919


ஆவிகளின் நடமாட்டத்திற்கு மற்றுமொரு கிளாஸிக் உதாரணமாய்த் திகழும் இந்தப்படம் HMS டேடலஸ் என்ற ராயல் நேவிக்கப்பலில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோ. இந்தப்போட்டாவில் பின்னனியில் தெரியும் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஃப்ரெட்டி ஜாக்சன் என்ற மெக்கானிக். கூடுதல் தகவல்;- இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அதேக்கப்பலில் அந்த மெக்கானிக் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார். அதுவுமில்லாமல் இது போன்ற கேளிக்கைகளில் தவறாமல் கலந்து கொள்வது அவரது சுபாவமாம்!!!


நியூபை சர்ச் துறவி


இங்கிலாந்தில் KF.லார்டு என்பவரால் நார்த் யார்க்ஸைரில் உள்ள அவரது சர்ச்சில் எடுக்கப்பட்ட படம் இது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் இது டபுள் எக்ஸ்போசரோ, ஏமாற்று வேலையோ இல்லை என்று நிரூபிக்கப்பட்ட படம். இதில் தெரியும் உருவம் 9 அடி உயரத்திலிருக்கும் ஒரு துறவி போலத்தெரிந்தாலும் அந்த சர்ச்சில் அது போன்றதொரு துறவியிருந்ததாய் எந்தவித வரலாறுகளும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.


லார்டு காம்பர்மெரி ஃபோட்டோ -1891


ஆவிகள் குறித்த ஆராய்ச்சியின் மிகப்பழமையான புகைப்படம் இது. 1891ம் ஆண்டு காம்பர்மெரி அப்பே நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல பதிவானது. இந்தப்படத்தை பார்த்தவர்கள் அது அங்கு வாழ்ந்த லார்டு காம்பர்மெரிதான் என்று உறுதியளத்தினர்.
கூடுதல் தகவல்;- இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டபோது லார்டு காம்பர்மெரியின் உடல் அருகிலிருந்த சுடுகாட்டில் எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது!!!.
ப்ரௌன் லேடி போட்டோ – 1936



பிரபலமான எல்லா புகைப்படங்களுக்கும் மேலானதாய் விளங்கும் புகழ்பெற்ற புகைப்படம்தான் இது. இந்தப்படம் இங்கிலாந்தின் ரேய்ன்ஹாம் ஹாலில் 1936ம் ஆண்டு இலண்டன் மேகஸின் பத்திரிக்கையின் புகைப்படக்கலைஞரால் எடுக்கப்பட்டது. இந்தப்புகைப்படத்தின் மற்றுமொரு சுவாராஸ்யம்… இதுவரை எடுக்கப்பட்ட பல பேய் புகைப்படங்களில் ஆவிகளின் உருவம் பிரிண்ட் போட்ட பிறகுதான் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தப்படத்திலிருக்கும் உருவம் கேமரா ஷட்டரை க்ளிக் செய்யும் சில நொடிகளுக்கு முன்னர் நேரிலும் தெரிந்திருக்கிறது. இந்தப்படமும், நெகட்டிவ்வும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டு இதில் எந்தவித போலித்தனமும் இன்றளவும் கண்டறியப்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு.


இன்னும் பல ஆவி போட்டாக்களும் இன்டர்நெட்டில் உலா வருகின்றன. அதெல்லாம் உண்மையா, போலியா என்ற விவாதிப்பதை விட அதிலிருக்கும் அமானுஷ்யங்களை சுவாரசியமாய் கொஞ்சம் ரசிக்கலாம்...







உலக அளவில் மட்டுமில்லாமல், இந்தியாவிலும் பல ஆயிரக்கணக்கான பேய்க்கதைகள் உலவுகின்றன. அவற்றில் சில உங்களின் பார்வைக்கு…


டன்னல் நம்பர் 103 – ஷிம்லா – கால்கா ரெயில்வே லைன்



இந்த டன்னல் நம்பர் 103ன் புகைப்படத்தைப்பார்த்தாலே அமானுஷ்யமாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இதைப் பற்றிய கதைகளுக்கு பஞ்சமிருக்குமா என்ன?... 


இது மட்டுமில்லாமல் ‘
பாங்கார்ஹ் கோட்டை – ராஜஸ்தான் ராஜ் கிரண் ஹோட்டல்-மும்பை, தாஜ் ஹோட்டல்-மும்பை, ஹோட்டல் சாவாய்-முசௌரி, ராமோஜி ஃபிலிம் சிட்டி-ஹைதராபாத்’’ என இன்னும் இன்னும் உலவும் பேய்க்கதைகள் ஏராளம். இன்னும் ஆழமாகத் துருவினால் நமது தெருவுக்குத்தெரு ஒரு பேய்க்கதை நிச்சயம் கிடைக்கும். 
அவற்றில் சில  உங்களின் பார்வைக்கு… இங்கே  <<கிளிக்>> செய்க 

பேய் இருக்கலாம்… இல்லாமலும் இருக்கலாம். இறப்புக்கு பின்னாலான ஆராய்ச்சிகள் முழுமையடைய வழியில்லாதவரையிலும் பேயை நம்புவதும், நம்பாமல் வாதிப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கப்போகும் சமாச்சாரமே. பேயிருந்தாலும்… இல்லாவிட்டாலும் இது சினிமாத்துறைக்கு பணம் சம்பாதிக்க உதவும் ஒரு திரில்லர் சமாச்சாரம்…. சாமான்யன்களான நமக்கு ஒரு சிறந்த திரில்லர் அமானுஷ்ய பொழுதுபோக்கு விஷயம்!!!

என்ஜாய் மக்களே…!!!

நன்றி 

2 comments:

  1. அமானுஷ்யம் : ஒரு பார்வை

    இறந்தவர்கள் இவ்வுலகில் மீண்டும் வருவர் என்றும், மனிதர்களிடமும் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு என்றும் பலரும் நம்பியிருப்பதை காண்கிறோம்.
    இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் ஒரு பக்கமெனில், இதை உண்மை என நம்பி அதனால் அச்சப்பட்டு வாழ்க்கையையே தொலைக்கின்றவர்களும் இருக்கின்றனர்.
    இதை இரு கோணங்களில் பார்க்கலாம்.
    அமானுஷ்யம் உள்ளது என்பதை நம்பி அதை கண்டு பயப்படுவது ஒரு வகை.
    பயந்து பயந்தே ஒன்றை அமான்ஷ்யமாக நம்பி விடுவது இன்னொரு வகை.
    அமானுஷ்யம் உள்ளது என்று நம்பி ஒருவன் பயந்தானேயானால், அவன் நம்பியது போல் அமானுஷ்யம் இருக்கிறதா என்பதை ஆராய சொல்லலாம்.
    ஒருவன் பயந்து பயந்து அதன் காரணமாய் அமானுஷ்யத்தை நம்பினானேயானால், அவனது பயத்தை தான் போக்க வேண்டும்.
    நம்பிக்கையில் இரு வகை உள்ளது. ஒரு சித்தாந்தத்தையோ கொள்கையையோ நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்கிற காரணத்தால் அதன் பரிணாமங்கள், விளக்கங்கள் அனைத்தையும் நம்புவது ஒரு வகை.
    இன்னொரு வகையானது, நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கை என்றாலும் கூட, அதிலுள்ள சித்தாந்தங்கள் அனைத்தும் நம்புவதற்கு ஏற்றவை தான் என்பதை புறக்காரணங்களின் துணையோடு நம்புவது.
    இரண்டில், இரண்டாம் வகை தான் அறிவுக்கும் ஏற்றது, பகுத்தறிவுக்கும் உகந்தது.
    எனது வேத வசனங்களைக் கொண்டு உங்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் கூட அவற்றில் குருட்டுத்தனமாகவோ செவிட்டுத்தனமாகவோ விழுந்து விடாமல் அதை ஆராய்ந்து, புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாமியர்கள் நம்புகிற வேதமான திருக் குர்ஆனும் இதை தான் சொல்கிறது.
    இந்த அறிவுரையை ஒரு சித்தாந்தம் கூறுகிறது என்றால் அதன் பரிணாமங்களில் எதனையும் நாம் சிந்தித்து ஏற்க முடியும் என்று பொருள். சிந்திக்காமல் அல்லது சிந்தனைக்கு எட்டாத வகையில் எந்த ஒன்றும் குர் ஆனில் இல்லை என்பதால் தான் அது தனக்கு தானே இந்த பெருமையை சூட்டிக் கொள்கிறது.
    இறைவன் இருக்கிறான் என்கின்ற நம்பிக்கையை ஏற்பதை பொறுத்தவரை மற்ற மற்ற மதத்தவர்கள், மேலே நாம் குறிப்பிட்ட முதலாம் வகையின் கீழ் வருவர். ஆனால், முஸ்லிம்களை பொறுத்தவரை, அதை வெறும் சடங்காக ஏற்காமல் காரண காரியங்களுடன் உள்ளத்தில் உரசிப்பார்த்து நம்புகின்றனர்.
    அதனால் தான், இறைவனை என் கண் முன்னே காட்டு, என ஒரு நாஸ்த்திகன் கேட்கும் போது, அந்த கேள்வி ஒரு ஹிந்து, கிறித்தவனை திணறடிக்கக்கூடிய கேள்வியாகவும் ஒரு முஸ்லிமுக்கு அது கேலிக்குரிய வாதமாகவும் தெரிகிறது.
    இறைவன் இருக்கிறான் என்பதை சான்றுகளுடன் நம்பி விட்ட பிறகு, அந்த இறைவனின் வார்த்தை தான் குர்ஆன் என்பதை பல்வேறு காரண காரியங்களுடன் நிரூபிக்கும் வகையில் ஏற்றுக் கொண்ட பிறகு, அந்த குர்ஆன் சொல்கின்ற எந்த அமானுஷ்யமானாலும் அவற்றை நம்பலாம். ஏனெனில், அதை சொல்வது இறைவன்!
    எதைக் குறித்து இறைவன் சொல்லவில்லையோ, அதையும் நாம் நம்பலாம், எப்போது?

    ReplyDelete

  2. அதை நேரடியாய் நம் கண்ணால் கண்ட பிறகு,
    அல்லது அதை குறித்த அறிவை நாம் செலுத்தும் போது,
    அது நம் சிந்தனைக்கும் நடைமுறைக்கும் உகந்ததாய் தென்படும் போது..
    ஒரு முஸ்லிமை பொறுத்தவரை மேலே உள்ள அளவுகோலில் ஒரு நம்பிக்கையானது வரையறுக்கப்படவில்லையெனில், அந்த நம்பிக்கை போலியானது என்று அவன் உதறி விட வேண்டும்.
    நம் பார்வைக்கு எட்டாத, சிந்தனைக்கு புலப்படாத, இறை வார்த்தைகளான‌ குர் ஆன், ஹதீஸ்களிலும் சொல்லப்படாத ஒரு அமானுஷ்ய‌ நம்பிக்கை பற்றி இவ்வுலகம் பேசுமானால் அது பொய் என அடித்துக் கூறி விடலாம்.
    ஆனால், வேடிக்கை என்னவெனில், இன்று, இறைவனை கண்ணால் காட்டினால் தான் நம்புவேன் என பகுத்தறிவை அடமானம் வைத்து வாதம் புரிவோர் கூட, கண்ணாலோ கருத்தாலோ அறிந்திடாத அமானுஷ்ய சக்தி மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
    மனிதனுக்கு மனித தன்மை தான் இருக்கும். அதை தாண்டிய ஒரு ஆற்றல் அவனுக்கு இருக்காது என்பதே பொதுவான விதி. இஸ்லாம் கூறும் வரலாறுகளில் இதில் விதிவிலக்கு பெற்றவர்களாக நபிமார்களையும் வேறு சிலரையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தால் கூட அவை குறித்து இறைவனே சொல்லி விட்ட காரணத்தால், மேற்கூறப்பட்ட பொது விதிக்கு இவை முரணாகாது.
    மனிதனுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் இருப்பதாய் நம்புவது பெருங்குற்றம் என அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பது இதிலிருந்து புரிகின்ற சாதாரண உண்மை. அல்லாஹ்வின் ஆற்றலை பெற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்றால், இருக்கின்ற ஒன்றை நம்புவது குறித்து அல்லாஹ் குற்றம் பிடிப்பதிலோ, நிரந்தர நரகத்தில் தள்ளுவதிலோ அர்த்தமிருக்காது!
    அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்றால் அல்லாஹ்வுக்கு இணையாக எவரும் இல்லை என்கிற சாதாரண உண்மை பலருக்கும் புரியாத காரணத்தால் தான் சில மனிதர்களுக்கு, அவர்களது இயல்பான ஆற்றலை மீறீய ஒரு அமானுஷ்யம் நிலவுவதாக அவர்கள் நம்புகின்றனர்.
    இத்தகைய நம்பிக்கைக்கு நாம் ஏற்கனவே கூறியது போல், அவர்கள் அது குறித்து கொண்டிருக்கும் அச்சமே காரணம். அல்லாமல், இறைவன் இருப்பதை எப்படி உணர்வால் புரிந்து, பகுத்தறிவால் சிந்தித்து, உள்ளத்தால் ஏற்று வாழ்கிறோமோ அப்படி எவரும் அமானுஷ்ய சக்திகள் குறித்து ஏற்றுக்கொண்டது கிடையாது.
    நாம் இதை நம்புகிறேன், அதனால் இது உண்மை என்று நிலைனாட்டும்படியாய் எந்த ஒன்றும் உலகில் கிடையாது. ஒன்றை உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதை ஏற்பதற்குரிய புறக் காரணங்கள் இருக்க வேண்டும். தான் நம்புவது ஒன்றே ஆதாரமாகி விடாது என்பதை புரிகிற தருணத்தில், இது போன்ற அமானுஷ்ய நம்பிக்கை போலியானது என்று விளங்கிக் கொள்ள முடியும்.
    இறைவன் இருக்கிறான் என்பதை நாம் நம்புவதோடு அல்லாமல் இந்த நம்பிக்கைக்கான புறச் சான்றை நான் காட்டுவேன்.
    இன்னும், இறை வேதம், இறை தூதர்கள், மறுமை வாழ்க்கை என எதை நம்புவதாக இருந்தாலும், அதை நம்புவது என்பது வெறும் சம்பிரதாய ரீதியிலான நம்பிக்கையல்ல, மாறாக, அதை நம்புவது தான் அறிவுசார் சித்தாந்தங்களுக்கு ஒத்தது என்பதை எவராலும் விளக்கி சொல்ல‌ முடியும்.
    ஆனால்,மனிதனே இறந்து பின் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவான் என்றோ அல்லது, மனிதனுக்கு, அவனது இயற்கை ஆற்றலை தாண்டிய ஆற்றல்களும் வெளிப்படும் என நம்புவதோ வெறும் நம்பிக்கை தானே தவிர, அது ஒரு காலும் நிரூபணமாகாது.
    முஸ்லிம்களை பொறுத்தவரை, இஸ்லாமிய கோட்பாடுகள் எதை அமானுஷ்யமாக சொல்கிறதோ அதை நம்பலாம். அதை கூட, எவருடன் தொடர்புபடுத்தி சொல்கிறதோ அதோடு மட்டுமே தொடர்புபடுத்தி நம்பலாம். அதை தாண்டிய நம்பிக்கை என்பது இல்லை.
    மூஸா நபி தமது கைத்தடியை பாம்பாக மாற்றிக் காட்டும் அமானுஷ்ய சக்தியை கொண்டிருந்தார்கள் என்றால் ஈசா நபிக்கும் அந்த சக்தி உண்டு என நம்பக்கூடாது.
    நிலவை பிளக்கும் ஆற்றலை இறைவன் முஹம்மது நபிக்கு கொடுத்தான் என்றால் அது போல் தாவூது நபிக்கும் செய்ய முடியும் என்று நம்பக்கூடாது.
    எந்த சக்தி, யாருக்கு, எப்போது இருந்ததாக குர் ஆன் சொல்கிறதோ, அவர் அந்த சக்தியை அந்த நேரத்தில் மட்டும் வெளிக்காட்டுவார் என்று தான் குர் ஆன் கூறும் அமானுஷ்யம் அல்லது மனித சக்தியை தாண்டிய அற்புதத்தை குறித்த நமது நம்பிக்கை இருக்க வேண்டும்.
    இந்த அடிப்படை நம் உள்ளங்களில் ஆழமாய் பதிந்து விடுமானால், குர் ஆன் கூறாத, நம் அறிவுக்கும் எட்டாத, எந்த நம்பிக்கையும் நமது உள்ளத்தை அசைக்காது !
    மனிதன் என்றைக்கும் மனிதன் தான்!

    ReplyDelete

welcome ur comment,