Thursday, April 4, 2013

பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "மச்சு பிச்சு"!!

பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "மச்சு பிச்சு"!! 


ரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை? முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் நமக்குப் "பார்த்தவுடனே" பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே!! 

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள் நம் முன்னோர்களின் சிறப்பைப் போற்றுகின்றன. இதே போல உலகெங்கும், வரலாற்றுத் தலங்கள் அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றன. 



தென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு!! செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட   "இன்கா பேரரசால்" கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்!!) 



பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் "மச்சு பிச்சு" நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு?

செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்? மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே!!



சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்!! இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். 


தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.



இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது?


பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர். ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.


ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர். இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ?


இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது "மச்சு பிச்சு".  பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.



மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும்!! 2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது. 
தென்னமெரிக்க நாடுகளில் நம்மவர்கள் பணியாற்றி வந்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடத்தில் மச்சு பிச்சுவைச் சேர்த்தாக வேண்டும்!!
பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து “எந்திரன்” படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்...

இந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி...

இந்தத் தலத்தைப் பற்றிய ஜியாகரபிக் சேனலின் காணொளி கீழே..


இது போன்ற வரலாற்றுத் தலங்கள்  சில காண்போம்...



திகைக்க வைக்கும் திவனாகு ஒரு வரலாற்று சின்னம் !!



'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1,

'ஈஸ்டர் தீவு' (Easter Island)




நாஸ்கா கோடுகள்.. 


நன்றி 
ஆசிரியர் ச. செந்தில்வேலன்.

2 comments:

  1. தி பெர்முடா த்றியாங்கிள்
    எம்மூளையை த்றிஹன்றடன் ஆங்கிளில்
    சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
    நீங்கள் என்னை பெர்முடாமுக்கோணத்திற்கே
    அழைத்துச்சென்று திகிலை ஏற்படுத்தியதுபோல் நான் உணர்கின்றேன்.
    ஜஸாக அல்லாஹு ஹைரா.
    அன்பின்
    சாளை:M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸுஃபி.
    காயல்பட்டணம்.

    ReplyDelete
    Replies
    1. THANK U BROTHER FOR READ AND ENCOURAGE SUGGESTION

      Delete

welcome ur comment,